Tamil Sanjikai

பண்டிகை காலங்களில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு, திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் இதனால் ரசிகர்களும், பொதுமக்களும் அதிகவிலை கொடுத்து தங்கள் விரும்பிய ஹீரோக்கள் நடித்த படங்களை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தடுக்க கடந்த 2017 ஆம் ஆண்டு அரசாணை ஓன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் வாகன கட்டணம் மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் 15 ரூபாயும், ஊராட்சிகளில் 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் 200 ரூபாய்க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்க கட்டணத்தை பொறுத்தவரை மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் ஏ.சி கட்டணமாக குறைந்தது 50 ரூபாயும், அதிகபட்சமாக 150 ரூபாயும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குறைந்தது 40 ரூபாயும், அதிகபட்சமாக 100 ரூபாயும், ஏ.சி இல்லாத அரங்கத்துக்கு 80 வரையும், கிராமபுரங்களுக்கு ஏ.சி யாக இருந்தால் 75 ரூபாயும், ஏ.சி இல்லாத அரங்கத்துக்கு 50 ரூபாய் வரை அரசால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எந்த திரையரங்கமும் இதை தற்போது கடைப்பிடிப்பது இல்லை.

இந்நிலையில் வரும் நவம்பர் 29ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படமும், பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளது. பெரும் செலவில் வெளியாக உள்ள இந்த படங்களுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படவும், கூடுதல் காட்சிகளை திரையிடவும் வாய்ப்புள்ளது. அதனால் நீதிமன்றம் தலையிட்டு அரசு உத்தரவை பின்பற்றாத திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்,

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டண வசூலிப்பதாக நீதிமன்றத்தை நாடுவது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிறப்பித்த அரசாணையை அரசு ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும், திரையரங்கத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் டிசம்பர் 19 ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கை ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment