Tamil Sanjikai

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்களில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் இல்லை. அவர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்களில் போதிய வசதி செய்து தருமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது, மனுதாரர் முருகானந்தம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகியோரின் வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அரசு கட்டிடங்களில் என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, எங்கே வசதிகள் வழங்கப்பட வேண்டும். பேருந்துகளில் வசதிகள் செய்து கொடுக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக உள்ளதா? என்பதை சமூக நலத்துறையின் முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்து துறையின் ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

0 Comments

Write A Comment