வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பகல் நேரங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்தது . 16-ம் தேதி மாலையிலிருந்து சற்று வேகமாக மழை பெய்யத் தொடங்கியது. அன்றிரவு 11 மணிக்கு இடி மின்னல் பலத்த காற்று இல்லாமல் அடைமழை கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது. 16-ம் தேதி இரவில் மட்டும் 166 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
சேண்பாக்கம், திடீர் நகர், முள்ளிப்பாளையம், மாங்காய் மண்டி, கொணவட்டம், கன்சால்பேட்டை, காந்தி நகர், ராஜாமணி தெரு, நேரு தெரு, சைதாப்பேட்டை, கஸ்பா, ராஜா தியேட்டர், சி.எம்.சி மருத்துவமனை பகுதி என வேலூரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. காட்பாடி வி.ஜி.ராவ் நகர், சித்தூர் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சுமார் 3 அடி உயரத்துக்குத் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வீடுகளை விட்டு வெளியேறினர். மறுநாள் 17, 18 தேதிகளிலும் மழை நீடித்ததால் குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்த மழை வெள்ளம் வடியவில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பரிதவிப்புக்குள்ளாகினர்.
கடந்த 1909-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வேலூரில் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 106 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. 110 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கி காலை வரை பெய்த மழை, அந்த சாதனையை மிஞ்சிருக்கிறது. 166 மில்லி மீட்டர் மழையளவு சாதாரணமானவை இல்லை என்று வானிலை மைய அதிகாரிகளே வியந்துபோயுள்ளனர்.
ஆம்பூர், வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முட்டியளவு மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து கூடுகிறது. நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. ஏலகிரி மலையின் பின்புறம் உள்ள ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளம் கொட்டுகிறது. பாலாற்றிலும் தண்ணீர் ஓரளவு பாய்ந்து ஓடுகிறது.
வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளை நுரை பொங்கியதைப் பார்த்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள தோல் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யும் வாணிடெக்கில் இருந்து சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீர் சட்டவிரோதமாகப் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடித்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்று அச்சப்பட்டனர்.
0 Comments