Tamil Sanjikai

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் ஆஜராக்கோரி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்தனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதி கெடுவாக நாளை ஆஜராக சரவணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment