Tamil Sanjikai

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர வினிதா, வயது 20. இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ (25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவன்-மனைவி இருவரும் காளையார்கோவிலில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கணவர் ஆரோக்கிய லியோ கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து வினிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வினிதாவுக்கு ‘டிக்-டாக்’ செயலி மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் அவருக்கு திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் ‘டிக்-டாக்’ செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து, ஒருவருக்கு ஒருவர் அனுப்பியும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்த ஆரோக்கிய லியோ ஒரு நாள் தனது மனைவியிடம் செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பேசியுள்ளார். அப்போது மனைவி வினிதாவின் கையில் ஒரு பெண்ணின் உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார். அதுகுறித்து மனைவியிடம் கேட்டதற்கு வினிதா, தனது தோழி அபியின் உருவம் அது என்றும், டிக்-டாக் மூலம் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாகவும், அவரது உருவத்தை தான் பச்சை குத்தியதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆரோக்கிய லியோ மனைவிக்கு தெரியாமல் சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்தார்.

பின்னர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆரோக்கிய லியோ, கடம்பாகுடி கிராமத்திற்கு மனைவியை அழைத்து சென்று, மாமியார் அருள் ஜெயராணியிடம் இதுபற்றி கூறி, மனைவிக்கு அறிவுரை கூறும்படி சொல்லிவிட்டு, வனிதாவை அங்கேயே விட்டுவிட்டுவந்துவிட்டார். இந்தநிலையில் தாயார் வீட்டில் இருந்த வினிதா திடீரென மாயமானார். மேலும் அங்கிருந்த அவருடைய அக்காள் புனிதாவின் 25 பவுன் நகைகளும் மாயமானதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினிதாவை தேடி வந்தனர்.

இதுகுறித்து வினிதாவின் கணவர் ஆரோக்கிய லியோ நிருபர்களிடம் கூறியதாவது:-

என் திருமணம் நடைபெற்று, சில மாதம் கழித்து எனது மனைவியை சொந்த கிராமத்தில் தனிக்குடித்தனம் வைத்து விட்டு, சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அங்கு சம்பாதித்த பணத்தை மாதந்தோறும் எனது மனைவி பெயரில் தான் அனுப்பி வைத்தேன். இந்தநிலையில் அவளது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. நான் போன் செய்தால், அவளிடம் இருந்து சரியான பதில் வருவதில்லை. ஒருநாள் அவளுக்கு ‘வீடியோ கால்’ செய்த போது, அவளது தோள் பகுதி அருகே கையில் அபி என்ற பெயரில் ஒரு பெண்ணின் உருவத்தை பச்சை குத்தி உள்ளதை கண்டேன். இதையடுத்து மனக் குழப்பத்தில் இருந்த நான், அவளுக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு வந்தேன்.

என்னைப்பார்த்ததும், “என்னிடம் கூறாமல் திடீரென ஏன் வந்தீர்கள்?” என்று என்னுடன் வினிதா தகராறு செய்தாள். அவளை சமாதானம் செய்து, பச்சை குத்தியதை அழித்து விடுமாறும், டிக்-டாக் செயலியை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவளிடம் கூறினேன்.

அவள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திருமணத்தின் போது எனது மாமியார் வீட்டில் இருந்து கொடுத்த 25 பவுன் நகையை, நான் வெளிநாட்டில் இருந்த போது, எனக்கு தெரியாமல் விற்று என் மனைவி ஆடம்பரமாக செலவு செய்துள்ளாள். மேலும் அவளுடைய அக்காளின் நகை 25 பவுனை எடுத்துக்கொண்டு தோழியுடன் சென்றுவிட்டாள் என கூறினார் .

இந்தநிலையில் வினிதா, தனது கணவருக்கு டிக்-டாக் செயலி மூலம் 2 வீடியோ பதிவை அனுப்பி உள்ளார். இந்த வீடியோவில் “அந்த பெண்ணுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ என்னை சந்தேகப்பட்டு பேசியிருக்க. என்னோட நகையை எல்லாம் நீதான அடகு வைச்சே. என்னை நீ சந்தேகப்பட்டு அடிச்சு கொடுமைப்படுத்தினது சரியா? நீ இப்படி என்னை கொடுமைப்படுத்தியதால்தான், நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். காணாமல் போன நகை எதுவும் என்னிடம் இல்லை. அந்த பொண்ணும், நானும் டிக்-டாக் பிரண்ட் அமைத்தும் தான். அந்த பொண்ணோட நான் போகல. நான் தனியாத்தான் இருக்கேன். அவ உயிருக்கு ஏதாச்சும் ஆச்சுனா அதற்கு நீதான் காரணம். இதை நான் எல்லா மீடியாவிலும் போடுவேன். நீ மட்டுமல்ல என் அம்மா, அப்பாவும் இதற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் மாயமான வினிதா நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆஜரானார். அவரிடம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தினர். வினிதா மாயமானது குறித்து திருவேகம்புத்தூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து போலீசார் வந்து வனிதாவை அழைத்து சென்றனர்.

முன்னதாக வினிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமணத்தின் போது எனக்கு வழங்கிய நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கும் தெரியும். இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18-ந்தேதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை அவர் சந்தேகப்பட்டு அடித்து கொடுமை படுத்தினார். இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தான் நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன். இந்நிலையில் டி.வி.யில் நான் நகையுடன் டிக்-டாக் தோழியுடன் மாயமானதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்த நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான், நான் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

0 Comments

Write A Comment