Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றுலாப் பயணங்கள் செல்லும் திருடர்கள் சிக்கினர்.

விஜயகுமார் மாலிக், சோஹைல்குலாப் பட்டான், கணேஷ்மாலி, அசோக்மால் ஜெயின் ஆகிய நான்கு நபர்களும் கர்நாடக மற்றும் ராஜஸ்தான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். திருட்டுத் தொழில் மூலம் நண்பர்களான இவர்கள், பல்வேறு இடங்களில் காரில் சென்று திருடுவார்கள்.

திருட்டுக்கு நடுவே இடை, இடையே சுற்றுலாவும் செல்வார்கள். திருட்டுத் தொழிலை ஜாலியாக செய்துவரும் இவர்கள், தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

நகை பட்டறை, ஐஸ் நிறுவனம், அரிசிக்கடை, பால்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து திருடியுள்ளனர். இந்தப் புகார்கள் சிவகங்கை காவல்துறை எஸ்.பி., ரோஹித்நாத் கவனத்துக்கு வர தேவகோட்டை உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த நிலையில், தொடர்கொள்ளையில் ஈடுபட்ட நான்கு வெளி மாநில நபர்கள் என்பது உறுதியானது.

அதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் உதவியால் திருடர்களை காவல்துறையினர் பிடித்தனர். சிவகங்கையில் திருட்டுச் சம்பவங்களை முடித்துவிட்டு ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலா செல்ல முடிவுசெய்து காரைக்குடியில் தங்கிருந்த தனியார் விடுதியில் இருந்து கிளம்பியுள்ளனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜாலி திருடர்களைப் பிடித்த போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

0 Comments

Write A Comment