Tamil Sanjikai

தமிழக மக்களால் அன்பாக அம்மா என்றழைக்கப்படும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் அதிமுக தலைமையகம் புறப்பட்டார்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகம் விழாக்கோலம் பூண்டது. அதிமுக தலைமையகத்துக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வருகையை ஒட்டி பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் புகழ்பாடும் பாடல்களும் இசைக்கப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர், கைம்பெண்கள் என பல்வேறு தரப்பினருக்காக தொடங்கப்பட்ட நலத்திட்டங்களைத் தொகுத்து பிறந்த நாள் விழா மலரும் வெளியிடப்பட்டது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு கட்சியின் சார்பில் இன்னோவா கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

அதிமுக தலைமையகத்தில் ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம், அன்னதானம் ஆகியவற்றையும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து தொடங்கி வைத்தனர். அதிமுக தொண்டர்களுக்கு இனிப்புகளையும் விநியோகித்தனர்.

இதைத் தொடர்ந்து 71 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது . முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர். அங்கிருந்த பிறருக்கும் முதலமைச்சர் கேக் ஊட்டிவிட்டார்.

அதிமுக தலைமையகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஹிலாரி கிளின்டன், வாஜ்பாய், நரசிம்மராவ் உள்ளிட்ட பெரும் தலைர்களுடன் ஜெயலலிதா எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் இடம்பெற்றிருந்தன. பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா எடுத்துக் கொண்ட புகைப்படமும் புதிதாக இணைக்கப்பட்டு அங்கு இடம்பெற்றிருந்தன.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை காமராஜர் சாலையில், பாரதிதாசன் சிலை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மகிழ மரக்கன்றுகளை நட்டனர்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன் ஆகியோரும் தலா ஒரு மரங்களை நட்டனர். அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல், வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பாக 191 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் முதற்கொண்டு ஆண்டு தோறும் 64 லட்சம், 65 லட்சம், 66 லட்சம் என இதுவரை 4 கோடியே 61 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment