Tamil Sanjikai

கஜா புயல் காரணமாக திருச்சியில் அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கஜா புயல் காரணமாக திருச்சிக்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை இளங்காகுறிச்சியில் ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் திருச்சியை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வையம்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதே போன்று கரூர் - திருச்சி மற்றும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில்களும் மின் தடையால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதே போன்று திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள சுங்கச் சாவடியும் கஜா புயல் காரணமாக சேதம் அடைந்து சாய்ந்துள்ளது

இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் பலத்த காற்று காரணமாக தரையிறங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மூன்று முறை வானில் வலம் வந்தும் தரையிறக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், பயணிகளுடன் அந்த விமானம் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. அதே போன்று சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் கொச்சியில் தரையிறக்கப்பட்டது.

0 Comments

Write A Comment