Tamil Sanjikai

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

கடந்த வாரம் கஜா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். கஜா புயல் கரையை கடந்த பிறகு கடல் கொந்தளிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் உள்மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்து வலுபெற்றுள்ளதால் ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான கடலோரப்பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மன்னார்வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் கடல் சீற்றம் ஏற்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் இயல்பு நிலை திரும்பும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, மீன்பிடி அனுமதி சீட்டையும் ரத்துசெய்துள்ளனர். இதனால் சுமார் 1800க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று கடலுக்கு செல்ல இருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திடீரென தடை விதிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச் சோடி காணப்பட்டது.

0 Comments

Write A Comment