அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை நோக்கி நகரக் கூடும் இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்பதால், கிழக்கு வங்கக்கடல், அந்தமான் - நிக்கோபர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வங்கக்கடல் பகுதிக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், அதனால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
0 Comments