Tamil Sanjikai

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குமரவேலும், ஆனந்தவள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, குமரவேலை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

இந்த நிலையில் விருத்தாசலத்தில் குமரவேலும், ஏழுமலையும் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். மதுபோதை ஏறியதும் ஏழுமலை, குமரவேலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குமரவேலின் உடலை தனது ஆட்டோவில் ஏற்றி செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே போட்டுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு வந்தார். அப்போது விருத்தாசலத்தில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆட்டோவில் ரத்தக்கறை இருந்ததையடுத்து சந்தேகத்தின்பேரில் ஏழுமலையை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் குமரவேலை கொலை செய்ததை தெரிவித்தார்.

பின்னர் கொலை சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீசார் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலை செய்த ஆட்டோ டிரைவர் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையின்போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான குமரவேலை பழிதீர்க்கவே கொன்றதாக போலீசாரிடம் ஏழுமலை தெரிவித்தார்.

0 Comments

Write A Comment