மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்கு பின், கஜா புயல் காரணமாக கடந்த மாதம் கனமழை பெய்தது. இம்மாத தொடக்கத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு அதிகம் இருந்து வருகிறது. பனி காரணமாக அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் காய்கறி தோட்டம், தேயிலை தோட்டகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த முறை வழக்கத்தை விட குளிரின் தாக்கம் சற்று கடுமையாக இருப்பதால், மாலை 3 மணிக்கே மக்கள் ஸ்வெட்டர், குல்லா போன்ற வெம்மை ஆடைகள் அணிந்தபடியே நடமாடுகின்றனர்.
பனி காரணமாக ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி., மைதானம், தாவரவியல் பூங்கா புல் மைதானம், தலைக்குந்தா உள்ளிட்ட புல்வெளி தளங்களில் போன்றவைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. பனியின் தாக்கத்தால் தேயிலை செடிகள், புற்கள் ஆகியவை கருகி வருகின்றன. பனியின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை காக்கும் வண்ணம் சில இடங்களில் விவசாயிகள் கோத்தகிரி தாகை செடி கொண்டு பாதுகாத்து வருகின்றனர். ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மலை காய்கறிகளை காக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மலை காய்கறி பயிர்களை காக்கும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளை காய்கறி விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
0 Comments