தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை சில காலங்களுக்கு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது.
போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் தந்த கோரிக்கையும், சுப்ரீம் கோர்ட்டில் வைத்த கோரிக்கையும் வேறு மாதிரியாக உள்ளது. வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் மூலம் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது.
0 Comments