கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாய்அன்பன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கார்த்திக், தான் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருவதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் . அதன்பிறகு இருவரும் செல்போன் மூலம் தங்களது நட்பினை வளர்த்தனர்.
இதற்கிடையில் தாய்அன்பன் மூலம் வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திக் தங்கினார். தினமும் சொகுசு காரில் ஆஸ்பத்திரிக்கு செல்வதும், மாலை வீடு திரும்புவதும் என இருந்தார். தாய்அன்பன் வீட்டில் உள்ளவர்களுடனும் நெருங்கி பழகினார். அப்போது, தான் கோடீஸ்வரன் எனவும், ஆனால் தாய்-தந்தை இல்லாத அனாதை என்றும் உருக்கமாக கூறினார். இதனால் அவருடன் தாய்அன்பனின் பெற்றோர் மிகவும் பாசமாக பழகி உள்ளார்.
தாய்அன்பனின் பெற்றோரே, அதே பகுதியை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் ஒருவரின் மகளை கார்த்திக்கிற்கு பெண் பார்த்து பேசி முடித்தனர். கடந்த புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன்நகரில் உள்ள ஒரு கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக், பெண் வீட்டாரிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றதாக தெரிகிறது.
சென்னை, புழல் ரெட்டேரி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது கார்த்திக்கின் மாமா என்று கூறிக்கொண்ட ஜெயக்குமார் என்பவர், பெண் வீட்டாரிடம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ஏற்கனவே வரதட்சணையாக 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். பெண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுள்ளோம். மேலும், திருமணப் பேச்சுவார்த்தையின்போது வரவேற்பு நிகழ்ச்சியை நீங்கள்தானே நடத்துவதாக ஒப்புக்கொண்டீர்கள். இதனால் பணம் தர முடியாது என்று பெண் வீட்டினர் கூறினர். இதனால் கார்த்திக்கின் மாமா ஜெயக்குமாருக்கும், பெண் வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் போதையில் இருந்த ஜெயக்குமார், "நீங்கள் நினைப்பது போல கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை" என்று உளறியுள்ளார். அதைக் கேட்டு பெண் வீட்டினரும், மணமகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக புதுமாப்பிள்ளை கார்த்திக்கிடம் பெண் வீட்டினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் கார்த்திக் அரசு டாக்டர் இல்லை என்ற தகவல் தெரிந்ததும் பெண் வீட்டினர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நிலைமை விஸ்வரூபமானதைப் பார்த்தவர்கள் திருமண மண்டபத்திலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும், அவரின் மாமா என்று கூறிய ஜெயக்குமார், அவரின் மனைவி வசந்தி ஆகியோரையும் பிடித்தனர்.
மாமாவாக நடித்த ஜெயக்குமார் ஓவராக நடித்து போலி டாக்டரை காட்டி கொடுத்து விட்டார்.
"கார்த்திக்கிற்கு மாமாவாக ஜெயக்குமாரும், அத்தையாக வசந்தியும் நடித்தது தெரிய வந்தது. இதனால் அவர்களையும் கைது செய்துள்ளோம். கார்த்திக்கிடமிருந்து விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றையும், அரசு டாக்டர் என்று அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து கார்த்திக் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments