Tamil Sanjikai

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எனது வீட்டில் இருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு செல்ல ‘ரேபிடோ செயலி’ மூலம், ‘பைக் டாக்சி’-க்கு பதிவு செய்தேன். நீண்டநேரமாக காத்திருந்த பின் பைக் டாக்சி வரவில்லை, கார் ஒன்று வந்தது. மழையாக இருப்பதால் எங்கள் நிறுவனம் சார்பில் காரை அனுப்பிவைத்தனர் என்று அதை ஓட்டிவந்த டிரைவர் தெரிவித்தார்.

நானும் அதை உண்மை என்று நம்பி காரில் ஏறினேன். ஆனால் கார் வடபழனி நோக்கி செல்லாமல் கிண்டி நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவர்களிடம், ‘நான் வடபழனி செல்ல வேண்டும், காரை ஏன் கிண்டி நோக்கி ஓட்டுகிறீர்கள்’ என்று கேட்டேன்.

அப்போது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டினார்கள். நான் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். மேலும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக, கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார்கள்.

பின்னர் என்னை நிர்வாணப்படுத்தி, நிர்வாண கோலத்தை செல்போனில் வீடியோ படமாக எடுத்தனர். பின்னர் என்னை காரில் அழைத்து சென்று எனது வீட்டின் அருகே நிறுத்தி இறக்கிவிட்டனர். அப்போது என்னை நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும், இதைப்பற்றி போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும், மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றும் அவர்கள் மிரட்டிவிட்டு சென்றனர்.

பின்னர் அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எனது செல்போனில் பேசி ரூ.50 ஆயிரம் பணத்தை உடனே தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீகுமாருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரின் முகவரி தெரியவந்தது. அவரது பெயர் சரவணன் (23) என்றும், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பக்கிரி தோட்டம், 3-வது குறுக்கு தெருவை சேர்ந் தவர் என்றும் தெரியவந்தது.

சரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் ‘ரேபிடோ’ பைக் டாக்சி நிறுவனத்தில் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் தமிழ்செல்வன் (26), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கத்தி, ரூ.11 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் தமிழ்செல்வன் தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஸ்ரீகுமாரை ஏற்கனவே பலமுறை பைக் டாக்சி மூலம் வெளியில் அழைத்து சென்றுள்ளார். ஸ்ரீகுமாரை கடத்திச்சென்றால் பணம் பறிக்கலாம் என்று சரவணன் தான் திட்டம் திட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் சரவணன் தனது நண்பர்களான தமிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரின் உதவியோடு கடத்தல் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Write A Comment