Tamil Sanjikai

ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் பணத்தை, ஊழியர்களே திருடி, பதுக்கிவிட்டு பணம் மாயமாகிவிட்டதாக நாடகமாடியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு பணம் எடுத்துச் சென்று நிரப்பும் பணியில் ஈடுபடும் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் நான்கு பேர், சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், ஒரு கோடியே 60 லட்ச ரூபாயை கொண்டு சென்று, 40 லட்சம் ரூபாயை கீழக்கரை, சிக்கல் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில். நிரப்பியதாகவும், பின்னர் கடலாடி அருகே மலட்டாறு முக்குரோட்டில், தாங்கள் வந்தபோது, 10 மணியளவில் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தனர். மேலும், வாகனம் விபத்துக்குள்ளான பிறகு, அதில் இருந்த ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மாயமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, புகார் அளித்த ஊழியர்கள் நான்கு பேரும், ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் இருந்ததால், காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுகுறித்து கேட்டபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, சாயல்குடி காவல்நிலையத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார், விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது, பணத்தை தாங்களே திருடி, கீழக்கரையில் உள்ள 2 பேரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வாகனத்தின் மேலாளர் குருபாண்டி, ஓட்டுனர் அன்பு, ஊழியர்கள் கபிலன் மற்றும் வீரபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார், கீழக்கரையைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வெறும் 25 லட்ச ரூபாயை மட்டுமே பறிமுதல் செய்த போலீசார், இந்த திருட்டில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment