Tamil Sanjikai

கோவை மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் தொடங்கிய முகாம் தொடர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் நடைபெற்றது. அதன்பின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தற்போது 11-வது ஆண்டு முகாம் வழக்கம்போல் இன்று தேக்கம்பட்டியில் தொடங்க உள்ளது. 6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் முகாம், அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், நடைபயிற்சிக்கான பாதை, குளியல் மேடை, ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமைச் சுற்றி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக ஒன்றரை கி.மீ தொலைவிற்கு சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலி, சீரியல் லைட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாமிற்காக நேற்று காலை முதலே கோயில் யானைகள் தேக்கம்பட்டி வர தொடங்கியது. நேற்று காலை 7 மணியளவில் மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோயில் யானை அபயாம்பிகை வந்தது. அதன்பின் திருக்காடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் யானை அபிராமி, கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் யானை பூமா ஆகியவை வந்தன. ஓராண்டுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியில் யானைகள் ஒன்றுக்கொன்று தும்பிக்கையால் வருடின. இன்று தொடங்கும் முகாம் 48 நாட்கள் நடைபெறுகிறது. ஜனவரி 30-ஆம் தேதி முகாம் நிறைவடைகிறது. முகாமில் கோயில்கள், மடங்களை சேர்ந்த 29 யானைகள் பங்கேற்கின்றன.

0 Comments

Write A Comment