கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தான் பெட்ரா இரு பெண் குழந்தைகளை தந்தை குடிபோதையில் ஆற்றில் வீசினார். இதில் ஒரு குழந்தையை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றினர், மாயமான மற்றொரு பெண் குழந்தையை தேடி வருகின்றனர்.
பத்தடி பாலத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் பாண்டி (35). இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு சோபனா (13), லாவன்யா (11), ஹரீ்ஸ்(9), ஸ்ரீமதி (7), குணசேகரன் (5) என 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாண்டியன் குடிபோதையில் அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் குழந்தைகளிடம் இடையே அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகமாக குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து அடித்து உள்ளார். இதனால், ரேணுகாதேவியின் சகோதரர் பாண்டியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி இன்று மாலை தன்னுடைய இரு மகள்களான லாவன்யா மற்றும் ஸ்ரீமதி ஆகியோரை அழைத்து கொண்டு அருகே உள்ள அரசலாற்று பாலத்துக்கு வந்துள்ளார். அப்போது திடீரென லாவன்யாவை ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். ஆற்றில் விழுந்த லாவன்யா கூச்சலிட்டதும், ஆற்றின் கரைகளில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் லாவன்யாவை காப்பாற்றினர்.
அப்போது பாண்டி அங்கிருந்து நைசாக நழுவி வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம் இரு குழந்தைகளையும் ஆற்றில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக ரேணுகாதேவி மற்றும் உறவினர்கள் ஆற்றுக்கு வந்தபோது, அங்கு லாவன்யாவை இளைஞர்கள் மீட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஸ்ரீமதி பற்றி எந்த தகவலும் இல்லை, அவரை ஆற்றில் வீசினாரா இல்லையா என்பது தெரியவில்லை, இருந்தாலும் பாண்டி கூறியதை அடுத்து ஆற்றில் ஸ்ரீமதி வீசப்பட்டாரா என தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், இளைஞர்கள் தேடி வருகின்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உறவினர்கள் பாண்டியை தாக்கியதால் படுகாயமடைந்தார். உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments