Tamil Sanjikai

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் போடாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினார்கள்.

உடனே அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருப்பி எதிர் திசையில் செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் எதிரில் வாகனங்கள் வந்ததால் தடுமாறிய அவர்கள் 2 பேரும் சாலையில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். உடனே அவர்களை நோக்கி போக்குவரத்து போலீசார் ஓடி வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் சாலையில் விழுந்தவர்கள் எழுந்திருக்காமல் சாலையின் குறுக்கே படுத்து உருண்டனர். போக்குவரத்து நிறைந்த கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் வேகமாக வந்தன. சாலையின் நடுவில் 2 பேர் படுத்து கிடப்பதை பார்த்ததும் வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை நிறுத்தி வேறு பக்கமாக திருப்பி சென்றனர். இது தெரியாத சில வாகன ஓட்டிகள் அருகில் வந்து பிரேக் போட்டு வேறு பக்கம் திருப்பி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே அவர்களை எழுந்திருக்குமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் எழுந்திருக்காமல் சாலையிலேயே படுத்திருந்தனர். சிறிது நேரம் படுத்து கிடந்த அவர்கள் அதன்பின்னர் எழுந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். எல்லா வாகன ஓட்டிகளையும் நிறுத்தி சோதனை நடத்தாமல் எங்களை மட்டும் நிறுத்தி சோதனையிடுவது ஏன்? என்று கேட்டு போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை திருப்பி அனுப்பினார்கள். அப்படியிருந்தும் அவர்கள் செல்லாமல் போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவத்தை அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளத்தில் பரவ விட்டனர். 2 பேரும் சாலையில் உருண்டு புரள்வதும், வாகனங்கள் வேகமாக அவர்கள் அருகில் வந்து திரும்பி செல்லும் காட்சிகள் வைரலாக பரவியது.

விசாரணையில் அவர்கள் மூர்த்தி (வயது 34) மற்றும் பழனிசாமி (33) என்றும் சிவானந்தகாலனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவர்களில் மூர்த்தி புரோட்டா மாஸ்டராகவும், பழனிசாமி ஏ.சி. மெக்கானிக்காகவும் வேலை செய்து வருகின்றனர்.

2 பேர் மீதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலையில் கலாட்டா செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Write A Comment