Tamil Sanjikai

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்சில், போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை செல்லும் நாகர்கோவில் டெப்போவை சேர்ந்த அரசு விரைவு பஸ், நேற்று முன்தினம், நாகப்பட்டிணத்தில் இருந்து மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டும். பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது கண்டக்டர் தனபால் வர தாமதமானதால், ஒரு மணி நேரம் பஸ் காத்திருந்தது. இதையடுத்து பஸ் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த விக்டர், டைம்கீப்பரிடம், ‘‘கண்டக்டர் வரவில்லை’’ என்றார்.

டைம்கீப்பர் செல்போனில் தொடர்பு கொண்டபோது கண்டக்டர் தனபால், ‘‘அருகில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள புதூர் ரயில்வே கேட்டில் நிற்கிறேன். பஸ்சை அனுப்பி விடுங்கள். இங்கிருந்து ஏறிக்கொள்கிறேன்’’ என்றார். இதையடுத்து கண்டக்டர் இல்லாமல் பஸ்சை அனுப்பி வைத்தனர். ரயில்வே கேட் அருகில் ஏறிய கண்டக்டர் தனபால், நிதானமில்லாமல் குடிபோதையில் இருந்துள்ளார். பயணிகளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, 50 ரூபாய் டிக்கெட்டுக்கு பதிலாக 100 ரூபாய் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் பயணிகள், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தனபால், ‘‘பஸ்சை நானே ஓட்டி எல்லோரையும் கொன்று விடுவேன்’’ என மிரட்டியுள்ளார்.

இந்த பஸ் நேற்று அதிகாலை ராமநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ராமநாதபுரத்தில் இறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட பயணிகள், பஸ்சை கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புமாறு கூறினர். பஸ் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் வந்ததும், பயணிகள், கண்டக்டரின் நடவடிக்கைகள் குறித்து ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டக்டர் தனபால் மீது பணி நேரத்தில், பயணிகளிடம் குடித்துவிட்டு தகாத முறையில் நடந்து கொண்டதற்காக துறைரீதியாக நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கண்டக்டர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

0 Comments

Write A Comment