பாடி முல்லைநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). தே.மு.தி.க. பிரமுகரான இவர், பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம் தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.
கட்டிட காண்டிராக்டரான பாண்டியன், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்று காலை 9 மணியளவில் அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பாடி குமரன்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது புல்லட்டில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் 6 பேரும்அவரை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. வீடு விற்றது தொடர்பாக பாண்டியன் சிலருக்கு புரோக்கர் கமிஷனாக பணம் கொடுக்க வேண்டியது இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பாண்டியனை தொடர்பு கொண்டு போனில் மர்ம நபர்கள் பேசியுள்ளனர்.
அப்போது பாண்டியனுக்கும், போனில் பேசியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் பாண்டியனை கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 Comments