தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்து, பின்னர் தீவிர புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இது கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக வலுக்குறைந்து வியாழக்கிழமை முற்பகலிலும், அதன் பின்னர் பிற்பகலிலும், பிறகு இரவிலும் புயலாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி தீவிர புயலாகவே 16-ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நாகை-வேதாரண்யம் இடையே, கஜா கரையைக் கடக்கத் தொடங்கியது. 2.30 மணிக்கு புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கரைகடந்த பகுதியில் பெரும் ஊளை-பேரிரைச்சலுடன் எதிர்ப்பட்டவற்றையெல்லாம் வாரிச்சுருட்டி சென்றது கஜா. புயலின் கண்ணில் பட்ட இடங்கள் எல்லாம் சின்னாபின்னமாகின. மரங்கள், மின்கம்பங்கள் என எதுவும் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பவில்லை. இதில் மாணவர்களில் பாடப் புத்தகங்கள் சேதமாகின. இந்த நிலையில், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கஜா புயல் பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
0 Comments