Tamil Sanjikai

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் வடகிழக்கே 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என்றும், பின்னர் வலுவிழந்து நாளை மாலையில் பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும். கடல் காற்று 100 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. தேங்காய் திட்டு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும், தவளகுப்பம், வீராம்பட்டினம், வைத்திகுப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட படகுகளும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி பார்வையிட்டு வருகிறார். புயல் காரணமாக நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்து உள்ளார்.இதைத் தொடர்ந்து திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment