வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில், வட தமிழக பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 840 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் அதி தீவிர கஜா புயல், வரும் 15-ஆம் தேதி முற்பகலில் சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளது.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வரைபடத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. புயல் காரணமாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் நவம்பர் 14-ஆம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், 15-ஆம் தேதி கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தென் தமிழகம், தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளிலும், நவம்பர் 15ஆம் தேதி கனமழை பெய்யும் என கூறியுள்ளது. கஜா புயலால் வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் நிலையில், நாளை காலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 110 கிலோ மீட்டராக இருக்கும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக, கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கிறது. இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க, 24 மணி நேரம் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீனவர்கள் அனைவரும் அவர்களது அலைபேசி மூலம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு விபரங்களை தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புயல் உருவாகும் முன், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்ற தங்குகடல் மீன்பிடி விசைப்படகுகளை பத்திரமாக கரை திரும்பிட ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 Comments