தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் சார்பில் 50 லட்சம் ரூபாயை தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் 50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments