டெல்லியில் வக்கீலாக பணியாற்றி வரும் எஸ்.கே.சாமி என்பவர், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 16.10.2014 அன்று நான் சென்னை அண்ணாசாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றேன். அப்போது எனக்கு வழங்கப்பட்ட உணவில் தலைமுடி கிடந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளரிடம் கூறினேன். ஒரு மணி நேரத்துக்கு பின்பு எனக்கு வேறு உணவை கொடுத்தனர்.
இதன்பின்பு வீட்டுக்கு சென்ற எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர், வாந்தி எடுத்தேன். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராயபேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். எனவே, சேவை குறைபாட்டுக்காக எனக்கு ரூ.60 லட்சம் வழங்கவும், மன உளைச்சலுக்காக ரூ.30 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதித்துறை உறுப்பினர் பாஸ்கரன், உறுப்பினர் லதா மகேசுவரி ஆகியோர் விசாரித்தனர்.
சரவணபவன் ஓட்டல் நிர்வாகம் தரப்பில், ‘உணவில் ஏதேனும் குறைபாடு இருந்தால் சில மணி நேரங்களிலே பாதிப்பு தெரிந்துவிடும். ஓட்டலில் சாப்பிட்டு 18 மணி நேரத்துக்கு பின்னர் தான் புகார்தாரர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொய்யான புகாரை அவர் கூறி உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘தரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே புகார்தாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதுபோன்று இல்லாமல் இந்த புகாரை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அவசியமோ தேவையோ இல்லை. புகார்தாரர் தரமற்ற உணவால் பாதிக்கப்பட்டிருப்பது அவர் போலீசில் அளித்த புகார் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே, மன உளைச்சல் மற்றும் இதர இடர்பாட்டுக்காக புகார்தாரருக்கு சரவணபவன் ஓட்டல் நிர்வாகம் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.
0 Comments