கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநில அரசு, மத்திய அரசிடம் 15000 கோடி நிவாரணமாக கேட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த மத்தியக் குழு கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து முடித்தது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினருடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு சிறப்பாக செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட் பாராட்டினார். கூட்டத்தின் முடிவில் 187 கோடி ரூபாய்க்கான கஜா புயல் சேத அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி மத்திய குழுவினரிடம் வழங்கினார். காரைக்காலில் ஆய்வை முடித்துக் கொண்ட மத்திய குழுவினர் புதுச்சேரியிலிருந்து சென்னை புறப்பட்டனர். சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அவர்கள், மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சம்ப்பிக்க உள்ளனர்.
இந்தநிலையில், 2 நாட்களில் கஜா புயல் குறித்த ஆய்வறிக்கையை மத்தியக்குழு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நிவாரணநிதி அறிவிப்பது பற்றி ஒரே வாரத்தில் முடிவு எடுக்கவும் மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர். 6-ஆம் தேதி தமிழக அரசும், மத்திய அரசும் அறிக்கை தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
0 Comments