Tamil Sanjikai

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை யாருக்கும் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்கா பிறப்பித்த தீர்ப்பில் அந்த சொத்துக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவரது வாரிசுகள் என்று தீபா மற்றும் தீபக் ஆகிய 2 பேரும் உள்ளதால், இந்த மனு குறித்து இருவரும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment