சென்னை கொளத்தூரை சேர்ந்த போதகர் ஒருவர் பிரைன் டியூமர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, ஏழை எளியோரை ஏமாற்றிவருவதாக, இந்திய மருத்துவ சங்கத்திற்கு புகார் ஓன்று அனுப்பப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய கிட்னி பிரச்சனையை ஒரு சிடியை மட்டும் வைத்து தீர்த்து வைக்கும் இந்த போதகரின் காணொலி இணையத்தில் மிக பிரபலம்..!
இதே பாணியில் தனது கை அசைவால் பேய்களை விரட்டுவதாகவும், நோய்களை குணப்படுத்துவதாகவும் கூறி சென்னை கொளத்தூர் மதனாங்குப்பத்தில் ஜெப்ரி மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜெபக்கூடம் நடத்திவருகிறார் போதகர் ஜெப்ரி...!
தனக்குத்தானே மருத்துவர் என்று பட்டம் போட்டுக் கொள்ளும் போதகர் ஜெப்ரி, ஞாயிற்றுக் கிழமை மட்டுமல்லாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை காலையில் நடத்துகின்ற சுகமளிக்கும் கூட்டத்தில் பிரைன் டியூமர், கிட்னி பெயிலியர், கண்பார்வை இழந்த நோயாளிகள் எல்லாம், தனது கை அசைவில் சுகம் பெற்றதாக பெருமை கொள்கிறார். இதற்கெல்லாம் உச்ச கட்டமாக தன்னுடைய வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்தவர் கூட சுகம் பெற்றதாக ஜெப்ரி கூறி வருகிறார்.
மருத்துவ உலகில் தமிழகம் முன்னேறிவிட்டதாக கூறிவரும் வேளையில், மேஜிக் கலைஞர் போல போதகர் ஜெப்ரி கை அசைவில் செய்யும் மருத்துவ வித்தைகள் அவரது ஜெபகூட்டத்திற்கு முதன் முறையாக சென்ற ஏழை எளிய மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், விபரம் அறிந்தவர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறி வருகின்றது.
இந்த நிலையில் மேஜிக் போதகர் ஜெப்ரி செய்யும், இந்த சுகமளிக்கும் வித்தைகள் , இந்திய மருத்துவ சட்டத்திற்கு புறம்பானது என்றும், ஏழை நோயாளிகள் மருத்துவமனைகளை நாடிச்செல்வதை தடுக்கும் தந்திரம் என்று குற்றஞ்சாட்டியுள்ள பெங்களூரை சேர்ந்த பணீந்திர குமார் என்பவர் இந்திய மருத்துவ சங்கத்திற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் சொல்வது போல உண்மையிலேயே நோயாளிகள் தான் சுகம் பெறுகிறார்களா ? அல்லது நோயாளிகளை போலவும், குணம்பெற்றவர்களாகவும் நடிக்கின்றனரா ? அவர் மருத்துவர் என்றால், எந்த கல்லூரியில் எந்த ஆண்டு மருத்துவம் பயின்றார் என்பதை அறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த புகாரில் பணீந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.
போதகர் ஜெப்ரி செய்யும் வித்தைகள் போலியாக இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும், அவரது வித்தைகளை தொலைக்காட்சி வாயிலாகவும், இணையத்திலும் காண்பவர்கள், உண்மை என்று நம்பி ஏமாறும் வாய்ப்புக்கள் உள்ளதால் உடனடியாக இதன் உண்மை தன்மையை கண்டறிவது அவசியமாகின்றது என்றும் அந்த புகாரில் பணீந்திர குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் இவரது புகாருக்கு 93 பேர் ஆதரவு கருத்து பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போதகர் ஜெப்ரி தரப்பு விளக்கத்தை பெற தொடர்பு கொண்டபோது, இணையத்தில் உள்ள தங்களது வீடியோவை பார்த்தாலே அது தானாக புரியும் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் ஜெப்ரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 1973 ஆம் ஆண்டு ஜெப்ரி பட்டப்படிப்பு முடித்து வேலைபார்த்து வந்ததாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, அவர் மருத்துவம் படித்ததாக எந்த குறிப்பும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஜெபக்கூட்டங்கள் நடத்தி காணிக்கை வசூலிப்பதில் ஏற்கனவே போதகர்களுக்குள் கடும் போட்டி உருவாகி உள்ள நிலையில் போதகர் ஜெப்ரிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments