ராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருள் செல்வன், இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி என்கிற சந்தியா (வயது 20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆர்த்தி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 17–ந் தேதி கல்லூரி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்த்தி உற்சாகமாக கல்லூரிக்கு சென்றார். அப்போது, தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் ஆர்த்தி தோல்வி அடைந்தார். இதனால் மிகவும் மனமுடைந்து போனார். அதனால், அவரது பெற்றோர் மற்றும் சக தோழிகள் ஆர்த்திக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்..
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆர்த்தியின் பெற்றோர் உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். இதனால், வீட்டில் ஆர்த்தி மட்டும் தனியாக இருந்தார். வீடு திரும்ப தாமதமானதால் பெற்றோர், மகளின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆர்த்தி போனை எடுத்து பேசவில்லை. அதைதொடர்ந்து, அருள் செல்வன் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சென்று மகளிடம் போனை கொடுக்குமாறு கூறினார்.
அந்த பெண் வீட்டுக்கு சென்று கதவை பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையறிந்த பெற்றோர், வீட்டுக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments