Tamil Sanjikai

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நடந்த கோவையை சேர்ந்த தொழிலதிபர் பரந்தராமன் கொலை சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

கடந்த 18-ம் தேதி கோவை, போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட நபி நகரில், வெளிநாட்டு உயர் ரக கார்களின் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பரந்தராமன் என்பவர் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும், கொலை செய்த நபர்கள் பரந்தராமன் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் பெண் ஊழியர்கள் அணிந்திருந்த நகைகள், அலுவலகத்தில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடைய் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி (30) என்பவரையும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30)மற்றும் திருப்பூரைச் சேர்ந்த நவீன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், அரிவாள் போன்றவற்றையும் பறிமுதல் செய்ய‌ப்பட்டது. தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் கூலிப்படையினர் 3 பேரை கைது செய்த போலீசார். தலைமறைவாக இருக்கும் கூலிப்படை தலைவன் கார்த்திக் உள்ளிட்ட சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதான ரவி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில், எனது தொழிலில் போட்டியாக இருக்கும் பரந்தராமன் அடிக்கடி தொழில் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்து வந்தார். இதனால், எனது தொழில் நஷ்டம் அடைந்தது. இது தொடர்பாக எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பரந்தாமன் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும், அவர் என்னை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர் கொலை செய்வதற்கு முன் முந்திக் கொள்வதற்காக, நான் கூலிப்படை வைத்து கொலை செய்தேன், என தெரிவித்தார்.

0 Comments

Write A Comment