Tamil Sanjikai

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அளிக்கப்படும். இதனால் இந்த திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை இன்று வெளியிட்டனர்.

சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கபட்ட அறிவிப்பாணைகளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த திட்டத்தால் சுற்று சூழலுக்கு கடுமையான பாதிப்பு உள்ளது என ஐகோர்ட் கூறி உள்ளது.

0 Comments

Write A Comment