Tamil Sanjikai

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்திற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நட்டம் ஏற்பட்டு வரும் நிலையிலும், மக்களின் தேவைக்காக தொடர்ந்து இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவையை, முடங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என போராட்டகாரர்களுக்கு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 8 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து, ஊழியர்கள் விளக்கம் அளிக்கலாம் என்று துறை ரீதியிலான வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் 8 போரையும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.

இதன் பின்னர் அவர்கள் 8 பேரும் நிர்வாக இயக்குனரை சந்தித்து முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக இயக்குனரை சந்தித்து ஊழியர்கள் முறையிடாத நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை நிர்வாக அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் சிலர், அங்கு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்ற அவர்களை தடுத்த மெட்ரோ ரெயில் நிர்வாக இணை பொது மேலாளரும், பெண் மேலாளரும் தாக்கப்பட்டனர்.

திருமங்கலம் ரயில் நிலையத்தில் உள்ள தீயணைப்பு கருவியும் சேதப்படுத்தப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் இருவர், ரயில் கட்டுப்பாட்டு சிக்னல் கருவிகளை சேதப்படுத்தியதாகவும், இதனால் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தின் போது சிக்னல் கருவி சேதப்படுத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள், போராட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர வாகன நெரிசலுக்கு மாற்றாக விளங்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபடுவதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர். போராட்டம் என்ற பெயரில் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கும் ஊழியர்களின் செயல்களுக்கும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் தொடர்ந்தால், மெட்ரோ ரயில் சேவையும், அதன் தரமும் பாதிக்கப்படும் என்று பயணிகள் கூறியுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளை ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் இணை பொது மேலாளர், மற்றும் மேலாளரை தாக்கியதாக ஊழியர்கள் பாண்டியன், வசந்தகுமார், விவேக் உள்ளிட்ட 18 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் சிக்னல்களை சேதப்படுத்தியது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments

Write A Comment