தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ உட்பட ஏழு பேர், முதலமைச்சருக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட ஏழு பேருக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தம்மை தொடர்புபடுத்தி தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயன், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 7 பேரும் தமக்கு எதிராக ஆதாரமில்லாமல் பொய் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக தமது பதவிக்கும், பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சம்பந்தப்பட்ட 7 பேரும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக தமக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், தமக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரியுள்ளார்.
அந்த வழக்கு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதிஷ் பராசரன், முதலமைச்சருக்கு எதிரான 7 பேரின் குற்றச்சாட்டு தவறானது என்றும், தேர்தல் நேரத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை 7 பேரும் பரப்பி வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் 7 பேருக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முதலமைச்சரின் மனு தொடர்பாக வரும் 30க்குள் 7 பேரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றை தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
0 Comments