Tamil Sanjikai

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

மனுதாரர் நளினி, நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்று கடிதம் கொடுத்துள்ளதாக அரசு வக்கீல் கூறுகிறார். நளினியின் விருப்பத்தை இந்த ஐகோர்ட்டு நிராகரிக்க முடியாது. தன்னுடைய வழக்கில் வக்கீல் இல்லாமல் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அதை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதேநேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அதற்கான போதிய ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.

எனவே நளினியை பாதுகாப்புடன் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும் சிறை விதிகளை மீறாமல், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூலை 5-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியது. அதன்படி நளினி ஆஜர்படுத்தப்பட்டார். இன்று விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

0 Comments

Write A Comment