Tamil Sanjikai

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. இதில் தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் தென்னை விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை விவசாயம் அடைந்துள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 2.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஹெக்டேருக்கு 35 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கடந்த 25-ஆம் தேதி அளித்த மனுவை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த தென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

0 Comments

Write A Comment