மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 27). இவர் சென்னையில் கமாண்டோ படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். உடல் நலம் இல்லாத தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு செல்ல சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்ட சென்னை-நெல்லை சுவிதா ரெயிலில் ஏறினார்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த காரணத்தினால் அந்த பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த லக்கேஜ் அறையில் ஏறி, பயணம் செய்தார். லக்கேஜ் அறையில் அவரருடன் கூட சில பயணிகளும் இருந்தனர்.
இந்த நிலையில் சுவிதா ரெயில் திருச்சிக்கு அதிகாலை 4.30 மணி அளவில் வந்தது. அப்போது லக்கேஜ் அறையில் பயணம் செய்த பயணிகள் இறங்கிச் சென்று விட்டனர். திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்த ரெயில்வே ஊழியர், அனைத்து பயணிகளும் இறங்கி விட்டதாக கருதி லக்கேஜ் அறை கொண்ட பெட்டியின் கதவை பூட்டினார்.
ஆனால், உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த சாமுவேல்ராஜ் சிறிது நேரம் கழித்து கண் விழித்து எழுந்ததும் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடன் பயணித்த பயணிகளை காணவில்லை, மேலும் லக்கேஜ் அறை கதவும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கதவை திறக்க உதவி கோரி கூச்சலிட்டார். ஆனால்யாரும் உதவிக்கு வராததால் அவர் உள்ளேயே சிக்கி தவித்தார்.
இந்த நிலையில் அவர் இறங்க வேண்டிய மதுரை ரெயில் நிலையத்துக்கு காலை 7 மணிக்கு ரெயில் வந்தது. அப்போது சாமுவேல் ராஜ், மாட்டிக்கொண்ட பெட்டிக்கதவை ரெயில்வே ஊழியர்கள் திறக்கவில்லை. பின்னர் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது.
இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. சில பயணிகள் லக்கேஜ் பெட்டிக்கதவை திறந்து சாமுவேல் ராஜை மீட்டனர். திருச்சியில் இருந்து நெல்லை வரை 6 மணி நேரம் சாமுவேல் ராஜ் கழிப்பறை வசதி, போதிய காற்று வசதி இல்லாத பெட்டிக்குள் சிக்கி தவித்துள்ளார்.
இதுகுறித்து சாமுவேல் ராஜ் கூறும்போது, “என்னை பெட்டிக்குள் வைத்து அடைத்தது மட்டுமல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல் ரெயில்வே கார்டு கதவை திறந்து விடவும் மறுத்து விட்டார். இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பேன்” என்றார்.
0 Comments