Tamil Sanjikai

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா. இவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது, பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் ஆனதோடு அதற்கான 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதையடுத்து தான் பிரியாணிக்கு செலுத்திய 76 ரூபாயை திரும்பப்பெற அந்த மாணவி 40,076 ரூபாய் இழந்துள்ளார்.

வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ப்ரியா, சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதற்கு 76 ரூபாயை ஆன்லைனிலேயே செலுத்தியுள்ளார்.ஆனால், பிரியாணிக்காக ப்ரியா காத்திருந்தபோது, அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டிருந்தது. பணம் பிடித்தம் செய்யப்பட்டதால் மாணவி, அதை எப்படி திரும்பப் பெறலாம் என சம்பந்தப்பட்ட ஆன்லைனின் சேவை மைய நம்பரை இணையதளத்தில் தேடினார்.

இணையதளத்திலிருந்து ஒரு நம்பரை எடுத்த ப்ரியா, அதற்கு தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசியவர், ப்ரியா கூறிய விவரங்களைக் பொறுமையாகக் கேட்டார். பிறகு, உங்களிடம் பிடித்த தொகை 100 ரூபாய்க்குள் இருப்பதால் அதை திரும்ப அனுப்ப முடியாது. அதோடு நாங்கள் மினிமம் பேலன்ஸாக 5,000 ரூபாய் இருந்ததால் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தைத் திரும்ப அனுப்ப முடியும். அதைக்கேட்ட ப்ரியா, 76 ரூபாயை திரும்ப பெற, 5000 ரூபாய் அனுப்ப சம்மதித்தார்.

இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசிய நபர், வங்கி அக்கவுன்ட் நம்பரை ப்ரியாவிடம் கூறினார். உடனடியாக அவரும் ஆன் லைனிலேயே 5,000 ரூபாயை அனுப்பிவைத்தார். அதன்பிறகு 5,076 ரூபாய் வரும் என ஆவலோடு ப்ரியா எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், சேவை மையத்திலிருந்து பேசிய நபர், நீங்கள் அனுப்பிய தொகை எங்கள் வங்கி கணக்குக்கு இன்னும் வரவில்லை என்று கூறியதோடு மீண்டும் 5,000 ரூபாயை அனுப்புமாறு கூறினார். அதை நம்பிய ப்ரியா, அடுத்து 5,000 ரூபாயை அனுப்பிவிட்டு வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அப்போதும் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசிய நபர், வங்கி கணக்கை செக் செய்துவிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன். விரைவில் உங்கள் பணத்தை திரும்ப அனுப்புகிறோம், நன்றி என்று தெரிவித்தார்.

அதன்பிறகும் ப்ரியாவின் வங்கி கணக்குக்கு எந்தப்பணமும் வரவில்லை. இதனால், ப்ரியா மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய நபர், ப்ரியாவின் முழுகதையையும் கேட்டப்பிறகு, நீங்கள் அனுப்பும் பணம் எங்கள் வங்கி கணக்குக்கு இதுவரை வரவில்லை. எனவே, மீண்டும் 5,000 ரூபாய் அனுப்பினால் உடனடியாக உங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப அனுப்பிவைக்கிறோம், நன்றி என்று கூறினார். இதனால் மூன்றாவது முறையாக ப்ரியா, 5,000 ரூபாயை அனுப்பினார். இதன்பிறகும் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பணம் திரும்ப அனுப்பப்படவில்லை.

இந்தமுறை ப்ரியா ஆத்திரமடைந்தார். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட அவர், இதுவரை 15,017 ரூபாயை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டேன். நீங்கள் பணம் வரவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், என்னுடைய அக்கவுன்ட்டில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.அதைக் கேட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றுபவர், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஏதாவது தொழிற்நுட்ப கோளாறாக இருக்கலாம். எனவே, மீண்டும் ஒரு முறை 5,000 ரூபாய் அனுப்புங்கள். நாங்கள் எங்கள் வங்கி கணக்கை செக் செய்துவிட்டு நீங்கள் அனுப்பிய முழுதொகையையும் திரும்ப அனுப்பி வைத்துவிடுகிறோம் என்று கூறியுள்ளார். இதை நம்பி 4வது முறையாக ப்ரியா, 5,000 ரூபாயை அனுப்பிவைத்தார். இவ்வாறு ஆன்லைனில் 8 தடவை 5,000 ரூபாய் விதம் ப்ரியா அனுப்பி வைத்து 40ஆயிரம் ரூபாயை இழந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பிரியாணிக்காக அவர் செலுத்திய 76 ரூபாயை திரும்ப பெற 40,000 ரூபாயை ப்ரியா அனுப்பி வைத்தும் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ப்ரியாவுக்கு பணம் திரும்ப அனுப்பப்படவில்லை.

இதனால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு ப்ரியா போனில் தொடர்பு கொண்டபோது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் என்று பதில் வந்துள்ளது. அதன்பிறகே ப்ரியா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.இதையடுத்து, நடந்தவற்றை குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் போலீஸார், `ஆன் லைன் மோசடி குறித்த புகார்களை நாங்கள் விசாரிக்கமாட்டோம். எனவே, நீங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடிப் பிரிவில் புகார் கொடுங்கள் என்று ப்ரியாவிடம் கூறினர்.

இதைத்தொடர்ந்து ப்ரியா, வங்கி மோசடி பிரிவில் பிரியாணி கதையை மத்திய குற்றப்பிரிவில் புகாராக எழுதிக் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ப்ரியா அனுப்பிய வங்கி அக்கவுன்ட், வாடிக்கையாளர் சேவை மைய செல்போன் நம்பர் குறித்து விசாரணை நடந்துவருகிறது.;இதுகுறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,ஆன் லைனில் பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஆன் லைன் பணப்பரிவர்த்தனைக்காக பல ஆப்ஸ்கள் உள்ளன. அதை, தங்களுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன்மூலம் எளிதில் பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால், அங்கு பல வகையில் மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடி செய்ய தனி டீம் செயல்பட்டுவருகிறது. இணையதளத்தில் தங்களின் செல்போன் நம்பர்களை வாடிக்கையாளர் சேவை நம்பர் என்று அந்தக் கும்பல் பதிவு செய்துவைத்துள்ளது. அதை உண்மையான வாடிக்கையாளர் சேவை நம்பர் என்று நம்பி பலர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த மோசடியில் பெரும்பாலும் படித்தவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆன்லைனில் பணத்தை இழப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் டோல்பிரி நம்பரில் தொடர்புகொள்ளுங்கள். இணையதளத்தில் உள்ள செல்போன் நம்பர்களில் பேச வேண்டாம்.

சமீபத்தில் இதுபோன்ற ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதைப் போல பேசும் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உங்களின் ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டுகளின் நம்பர்கள், ரகசிய எண்கள், சிவிவி நம்பர்கள் ஆகியவற்றை நைசாக கேட்டறிந்து உங்கள் அசவுண்டிலிருந்து பணத்தை திருடுகின்றனர் , ஆன் லைன் பரிவர்த்தனையின்போது ஓடிபி எண்களை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பலர் ஏமாந்துவிடுகின்றனர்;கல்லூரி மாணவி ப்ரியா, ஒரு பிரியாணிக்காக 40,076 ரூபாயை ஏமாந்துள்ளார். இந்த மோசடியில் பெரும்பாலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். அவர்களைக் கைது செய்தாலும் ஜாமீனில் வெளிவரும் அந்தக்கும்பல் மீண்டும் மீண்டும் கைவரிசை காட்டிவருகிறது.இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போலி வாடிக்கையாளர் சேவை மைய நம்பர்களை நீக்குவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.

0 Comments

Write A Comment