தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 10 நாட்கள் ஆகியும் மக்கள் மீளாத்துயரில் தவித்து வருகிறார்கள். பல்வேறு கட்சியினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
இந்தநிலையில் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 15 ஆயிரம் கோடி நிதியுதவியை கேட்டார். இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
புதுக்கோட்டையில் இன்று மாலை 4 மணியளவில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது. இதற்காக அந்த குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை செல்கிறார்கள். இந்த குழுவில் உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கபூல், மத்திய எரிசக்தி முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் மாணிக் சந்திரா, சாலை மற்றும் போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர். இளவரசன் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.
இன்று முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மீட்பு குழு அதிகாரி சுனில் பாலிவால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சம்பு கலோ லிகர், கலெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குழுவினருடன் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பால கிருஷ்ணரெட்டி, கே.சி.கருப்பணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.
0 Comments