கஜா பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கஜா புயலால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திந்துள்ளனர். ஆனாலும், மிகுந்த தைரியத்துடன் அவர்கள் உள்ளனர் என்று மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், நேற்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, புதூர், புலவன்காடு, நெம்மேலி, ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, மல்லிப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் உடைந்து போன படகுகள், சிதைந்து போன வலைகள், சேதமடைந்த வீடுகள் ஆகியவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிகொள்ளை பகுதியில் ஆய்வு நடத்திய மத்திய குழுவினர், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்தனர். அப்போது, ஆய்வுக்குழுவினரை கண்ட உடன் முகாமில் இருந்தவர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் பேசிய டேனியல் ரிச்சர்ட், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கிருந்து தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களையும், சேதமடைந்த பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் ரிச்சர்ட், புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் தைரியமாக உள்ளதாகவும், ஆய்வு பணிகள் முடிவடைந்ததும் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார். புயலால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திந்துள்ளனர். ஆனாலும், மிகுந்த தைரியத்துடன் அவர்கள் உள்ளனர். ஆய்வு பணிகள் முடிந்த பின் டெல்லியில் சேதம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருவாரூரில் ஆய்வை முடித்த மத்தியக் குழுவினர், நேற்றிரவு நாகை வந்தடைந்தனர். பின்னர், நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதிப்பு குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் மத்தியக்குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது. இன்று நாகையில் ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினர், பிற்பகலில், காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
0 Comments