தமிழகத்தின் பத்து நகரங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய்.3500 கோடி கடனுதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியுடன், மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டுள்ளது.இந்தியாவில் நகரப்பகுதிகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், பல நகரங்களில் போதிய வசதிகள் இல்லை. 50 சதவீதத்துக்கும் குறைவான வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல 42 சதவீத வீடுகளுக்கு மட்டுமே கழிவுநீர் வடிகால் வசதி உள்ளது.
இதன் காரணமாகவும், வறட்சி, சீரற்ற வானிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாலும், அடிப்படை வசதிகளை அதிகரிக்க ஆசிய வளர்ச்சி வங்கியுடன், மத்திய அரசு நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மொத்தம், 3500 கோடி ரூபாய் கடனுதவித் திட்டத்தின் முதல் பங்கான 1,130 கோடி ரூபாயை வழங்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியில் கையெழுத்தானது. இதில், மத்திய பொருளாதார விவகார அமைச்சகம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் சென்னை, ராஜபாளையம், கோவை, திருச்சி, வேலூர் மற்றும் நெல்லை நகரங்கள் முதல்கட்டத்தில் பயனடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
0 Comments