விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், இவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக உள்ளார். இவர் சவாரிக்காக பழவந்தாங்கலில் இருந்து மேடவாக்கம் சென்றுள்ளார். அப்போது சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, அவ்வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக்காவலர், கார் ஓட்டுநர் ரஞ்சித்தை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அவ்வழியாக சென்ற மற்றொரு டாக்சி ஓட்டுநர், ரஞ்சித்திற்கு ஆதரவாக காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த காவலர், ரஞ்சித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த மற்ற கார் ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கரனை-வேளச்சேரி சாலையில் காவலரை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்வளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அண்மையில் போலீசார் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறி ராஜேஷ் என்ற டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 Comments