தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.
இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது
அதன் படி இன்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் ரத்து செய்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு ஆணை செல்லும் என கூறி உள்ளது.
0 Comments