நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கஜா தற்போது புயலாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் கடல் பகுதியிலேயே தீவிர புயலாக மாறும் என்றும், ஆனால் கரையைக் கடக்கும்போது தீவிரம் குறைந்து புயலாகவே கரையைக் கடக்கும் எனவும்,சென்னையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் இயல்பான அளவிலேயே இருக்கும். ரெட் அலர்ட் என்பது பொதுமக்களுக்கானது அல்ல என்றும், நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்வதற்காக தரப்படும் எச்சரிக்கை தான் . ரெட் அலர்ட் கொடுப்பதால் முழு தமிழகத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம் அல்ல எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
இந்தநிலையில் ,கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் கஜா புயலுக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும், புயலால் சேதம் அடைந்தால், மின் கம்பங்களை உடனடியாக சீரமைத்தல், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாயும் மரங்களை விரைந்து அகற்றுதல் குறித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது குறித்தும், பள்ளிகளில் தற்காலிக நிவாரண முகாம்களை அமைப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசித்தார்.
0 Comments