மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த 1 வருடத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உதவியாளர், கார் ஓட்டுநர், அவரது அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவன் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, சசிகலாவின் குடும்பத்தினர் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட அவகாசங்கள் முடிவடைந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் கோரிக்கையின் படி மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த சூழலில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருடன் சசிகலா 75 நாட்கள் தங்கியிருந்ததால், அவரிடம் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசி்கலா தரப்பில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டது. அதற்கு 55 பக்க அபிடவிட் சசிகலா தரப்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி, பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கும், தமிழக உள்துறைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எழுதிய கடிதத்தில், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெற்று தரும்படி கூறப்பட்டுள்ளது.
0 Comments