Tamil Sanjikai

செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாதது, நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடியை கடந்து சென்றது, கால்நடைகளும் மனிதர்களும் தண்ணீர் இன்றி தவிப்பது, அணைகள் தூர்வாரப்படாமல் தண்ணீர் சேமிக்க முடியாதது உள்ளிட்டவை அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

2020ஆம் ஆண்டில் தமிழகம் தண்ணீர் இன்றி சுடுகாடாகும் என்ற “நிட்டி” (( NITI )) அமைப்பின் ஆராய்ச்சி முடிவையும் குறிப்பிட்டு போர்க்கால அடிப்படையில் அணைகளைத் தூர்வாரி தண்ணீர் சேமிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி குடிதண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்புவதோடு, தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், சேமிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என்றும் கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரங்கள் அனைத்தையும் வெட்டி, நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து பாதுகாக்க தவறிய நிலையில், நீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை மழையை நாடுவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறி, அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment