Tamil Sanjikai

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டதொழில் அதிபரின் மகளும், ஐ.டி பெண் ஊழியருமான ஒருவருக்கு சென்னை பெருங்குடி அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து காலில், அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவர், அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் 6 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெண் ஊழியர் கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இணையதளத்தில் சிறந்த மருத்துவமனை குறித்து தேடியுள்ளார். அப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனை சிறப்பாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை பெருங்குடி அப்பல்லோவில் கடந்த 4 ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி கடந்த 6 ந்தேதி அந்த பெண்ணுக்கு இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டு, முகத்தில் செயற்கை சுவாச கருவி பொறுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையை அந்த பெண் பார்க்க கூடாது என்பதற்காக இடுப்புக்கு மேல் குறுக்காக திரைசீலை போட்டு மறைத்திருந்தனர். ஒரு பக்கம் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க, மறுபக்கம் அந்த பெண்ணின் தலை பக்கத்தில் நின்றிருந்த லேப் டெக்னீசியன் டெல்லி பாபு என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

முகத்தில் செயற்கை சுவாச கருவி மாட்டப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் சத்தமிட இயவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து, செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதும் அங்கிருந்த மருத்துவர்களிடம் லேப் டெக்னீசியன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டினார். அதற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த மருத்துவர்களோ புகாரை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது .

அப்பல்லோ நிர்வாகத்தில் இது தொடர்பாக அந்த பெண் புகார் தெரிவித்த போதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற போது, அந்த பெண் மன நிலை பாதிப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் என கூறி போலீசாரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

ஆனால் அந்த பெண் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று போராட்டத்தில் இறங்கினார். ஆனால் அப்பல்லோ நிர்வாகமோ தங்களுக்கு வேண்டப்பட்ட இரு போக்குவரத்து போலீசாரை கொண்டு விசாரிப்பது போல நாடகமாடியுள்ளனர்.

இது குறித்து மீண்டும் காவல் ஆணையருக்கு அந்த பெண் ஆன்லைனில் புகார் அளித்ததால், நிலைமையின் தீவிரம் உணர்ந்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரிடமும் அந்த பெண்ணுக்கு மன நிலை சரியில்லை, அதனால் சிகிச்சை அளித்து வருகிறோம் என்ற அடிப்படையில் பேசி சமாளித்துள்ளனர்.

அதனை ஏற்காத காவல் உதவி ஆய்வாளர், அந்த பெண்ணின் மருத்துவ அரிக்கையை வாங்கி பார்த்த போது அவர் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்தார். மேலும் அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து விசாரித்த போது தனக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது லேப் டெக்னீசியன் அறுவெறுக்க தக்கவகையில் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறி அந்த பெண் கதறியுள்ளார் .

இது தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 6 நாட்கள் கடந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் டில்லிபாபுவை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்வதில்லை என்று அந்த ஐடி பெண் ஊழியர் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடுமையை விட, அந்த பெண்ணுக்கு மன நோயாளி பட்டம் சூட்டிய அப்பல்லோ நிர்வாகத்தின் அட்டூழியம் கடும் கண்டனத்துக்குறியது என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment