Tamil Sanjikai

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எதற்காக தமிழக சட்டமன்றம் கூடுகிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ,காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த அணைக்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் செயலைக் கண்டித்து, திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று கண்டனப் போராட்டம் நடத்தின. இதில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை 4 மணிக்கு கூடும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். இந்த சிறப்புக் கூட்டத்தில், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே எந்த அணையை கட்டவும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment