Tamil Sanjikai

ஏழு பேர் விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை உருவாக்குகின்றனர் எனவும், ஏழு பேர் குறித்த கேள்வியை தம்மிடம் தெளிவாக கேட்கவில்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு, ஒருவருக்கு எதிராக பத்து பேர் ஒன்று சேர்ந்தால் யார் பலசாலி என்று ரஜினி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.கவை ஆபத்தான கட்சி என்று தான் கூறவில்லை, பா.ஜ.கவிற்கு எதிராக ஒன்று சேரும் கட்சிகளுக்கு தான் பா.ஜ.க ஆபத்தான கட்சியாக இருக்கும் என்றே தான் கூறியதாகவும் ரஜினி விளக்கம் அளித்தார்.

அப்போது பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஒருவருக்கு எதிராக பத்து பேர் ஒன்று சேர்ந்தால் யார் பலசாலி என்று ரஜினி பதில் கேள்வி எழுப்பினார்.

ஏழு தமிழர்களை தான் யார் என்று கேட்கவில்லை என்றும், ஏழு பேர் என்று தெளிவில்லாமல் கேள்வி கேட்டதால், எந்த ஏழு பேர் என்று கேட்டதாகவும் ரஜினி விளக்கம் அளித்தார். பேரறிவாளன் பரோலில் வந்தபோது, அவருக்கு ஆறுதல் சொன்னவன் தான் என்றும், மனிதாபிமான அடிப்படையில் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமது கருத்து எனவும், மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது தான் தனது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை என குறிப்பிட்ட ரஜினிகாந்த், சர்கார் பட பேனரை அதிமுகவினர் கிழித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் பிறரை மரியாதையுடன் பேசுவது நல்லது எனவும், சர்கார் படப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், சினிமாவில் உணர்வுப்பூர்வமான விஷயங்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment