கோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது38). இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2014-ம் ஆண்டு ஆர்த்தி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து அருண்ஜோ அமல்ராஜ், சமாதானம் செய்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் கடந்த மே மாதம் 9-ந் தேதி ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
அப்போது கணவன்- மனைவி இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்ஜோ அமல்ராஜ், தனது மனைவி ஆர்த்தியை காரில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தன்னை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொல்ல முயன்றதாக துடியலூர் போலீசில் ஆர்த்தி புகார் செய்துள்ளார்.
தற்போது ஆர்த்தி மும்பையில் வசித்து வருகிறார். ஆர்த்தியை காரில் இருந்து தள்ளி விட்டதில் அவருக்கு தலை, கால், மூட்டு பகுதிகளில் காயம் ஏற்பட்டது என்றும், தன்னுடைய கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீதும் ஆர்த்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக கணவர் அருண்ஜோ அமல்ராஜ், மற்றும் மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியை கணவரே கொல்ல முயன்றது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments